79 பள்ளிகளில் உள்ள 232 வாகனங்கள் ஆய்வு


79 பள்ளிகளில் உள்ள 232 வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 பள்ளிகளில் உள்ள 232 வாகனங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையிலான குழுவினார் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 79 பள்ளிகளில் உள்ள 232 வாகனங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையிலான குழுவினார் ஆய்வு செய்தனர்.

செயல் திறன் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து அதிகாரிகள் கூட்டாய்வு ஏ.வி.சி. கல்லூரி மைதானத்தில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் உதவி கலெக்டர் யுரேகா, மாவட்ட மெட்ரிக் கல்வி அலுவலர் சிவதாஸ், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விஸ்வநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தில் உள்ள 79 பள்ளிகளில் உள்ள 232 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தகுதி நீக்கம்

பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் தளம், வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, வாகனத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா, அவசரகால வழி உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வாகனத்தில் உள்ள அவசரகால வழி கதவை உடைத்து திறந்து பார்த்து மாவட்ட கலெக்டர் சோதனை மேற்கொண்டார். தகுதி இல்லாத 14 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகளை சரி செய்து மறு தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக விபத்து மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகளை மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.


Next Story