ஆத்தூர் பகுதியில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள்; அதிகாரி ஆய்வு
ஆத்தூர் பகுதியில் வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார்.
ஆத்தூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அக்கரைப்பட்டி, மணலூர், போடிகாமன்வாடி, வக்கம்பட்டி ஆகிய 4 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 10 ஏக்கர் பரப்பளவில் தரிசுத்தொகுப்புகளை கண்டறிதல், பவர்டில்லர், 100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டை அமைத்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல் ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வேளாண்மை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது 2021-22-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சித்தரேவு தரிசுநில தொகுப்பு குழு, 2023-24-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அக்கரைப்பட்டி தரிசுநில தொகுப்பு மற்றும் ஆத்தூர் வட்டார சேமிப்பு கிடங்கு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
பின்னர் நிலக்கோட்டை, ஆத்தூர் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளை சேர்ந்த வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களிடம் கலந்துரையாடி திட்ட முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) அமலா, வேளாண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) வடிவேலு, ஆத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் குமணவேள், வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.