வருவாய் கோட்டாட்சியர்-தாசில்தார் ஆய்வு


வருவாய் கோட்டாட்சியர்-தாசில்தார் ஆய்வு
x

வருவாய் கோட்டாட்சியர்-தாசில்தார் ஆய்வு

தஞ்சாவூர்

33 கடைகள்-புதிய சாலை அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

33 கடைகள்

தஞ்சை பெரியகோவில் முன்பு தலையாட்டி பொம்மைகள், கலைப்பொருட்கள், தஞ்சை கலைத்தட்டுகள் மற்றும் டீக்கடைகள் என 33 கடைகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2015-ம் ஆண்டு இந்த கடைகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கு பதிலாக மாற்று இடம் எதுவும் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் வியாபாரிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வியாபாரிகளுக்கு கடைகளை அமைத்து கொடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அழகிகுளத்திற்கு அருகே சாலையோரத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடமானது தலையாட்டி பொம்மை, தஞ்சை கலைத்தட்டுகள் மற்றும் பெரியகோவில் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்ய உகந்த இடம் இல்லை என கூறி அந்த இடத்திற்கு வியாபாரிகள் செல்லவில்லை.

கோரிக்கைகள்

இந்தநிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. ஆகியோரை தனித்தனியாக வியாபாரிகள் சந்தித்து பெரியகோவில் அருகே கடைகள் அமைத்து கொள்ள மாற்று இடம் வழங்க வேண்டும் என தஞ்சை பெரியகோவில் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சரவணன் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பெரியகோவில் அருகே மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியகோவில் அருகே புதுஆற்றங்கரையில் உள்ள கரிகால்சோழன் நடைபாதை அருகே காலியாக உள்ள இடத்தில் 33 கடைகளையும் அமைத்து கொடுப்பதற்கான ஆரம்பகட்ட பணி தொடங்கியுள்ளது.

ஆய்வு

மேலும் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இவைகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த அருங்காட்சியகத்திற்கு பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக புதிதாக சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியகோவில் அருகே உள்ள பாலத்தையொட்டி இந்த சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிதாக சாலை அமைப்பது தொடர்பாக தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேலும் 33 கடைகள் அமைப்பது தொடர்பாக அளவீடு செய்யும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இது தொடர்பாக தஞ்சை பெரியகோவில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, கலெக்டர், எம்.பி. ஆகியோரின் முயற்சியின் காரணமாக 33 வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க மாற்று இடம் கிடைக்கப்பட உள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.


Related Tags :
Next Story