குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி
ஏனங்குடி ஊராட்சியில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது
திட்டச்சேரி:
தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்றவற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு, வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நிறைவு பெற்றால் மட்டுமே அனைவருக்கும் வீடு என்ற இலக்கு நிறைவேறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலாளர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.