கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் ஆய்வு
வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார்.
கடனுதவி
கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளரும், வேலூர் மாவட்ட முன்னாள் கலெக்டருமான சண்முகசுந்தரம் நேற்று வேலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தார். அப்போது காட்பாடியில் உள்ள வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கரும்புகளை பார்வையிட்டார். பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் காசோலை பிரிவில் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
விவசாயிகளுக்கு உரம்
காட்பாடியில் உள்ள டான்பெட்டில் உரம் கலக்கும் எந்திரத்தை பார்வையிட்ட அவர் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் சென்றடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மண்டல இணை பதிவாளர் (பொறுப்பு) நந்தகுமார், வேலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் கோமதி, ராணிப்பேட்டை மண்டல இணைப்பதிவாளர் சரவணன், துணை பதிவாளர்கள் அழகப்பன், சுரேஷ்குப்தா, சரவணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், ராஜதுரை, ராசகோபால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.