நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய காவலாளி பணியிடை நீக்கம்
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுகோஸ் ஏற்றிய இரவு காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுகோஸ் ஏற்றிய இரவு காவலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குளுகோஸ் ஏற்றிய காவலாளி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மோதகப்பல்லி பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5-ந் தேதி இரவு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த இரவு காவலாளி சுரேஷ் (வயது 30) என்பவர் சக்கரபாணியை சக்கர நாற்காலியில் அமர வைத்து வார்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு டாக்டர்கள் இல்லாததால் சக்கரபாணியை படுக்கையில் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சக்கரபாணியின் உறவினர்களிடம், சுரேஷ் பணம் கேட்டதாகவும், அவர்கள் தர மறுத்த நிலையிலும் கட்டாயப்படுத்தி பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பணியிடை நீக்கம்
சக்கரபாணிக்கு, சுரேஷ் குளுகோஸ் ஏற்றிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தநிலையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்றிய இரவு காவலாளி சுரேஷை நேற்று பணியிடை நீக்கம் செய்து, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில் மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகளின் பணிகளை அங்கு பணியாற்றும் வேறு ஊழியர்கள் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் நோயாளிகளை கை தாங்கலாக அழைத்துச் செல்வது, படுக்கையில் இருந்து அவர்களை தூக்கி ஸ்ட்ரெச்சர் மூலம் அறுவை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைப்பது போன்ற பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
கைது நடவடிக்கை
அதேபோல் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பது, அன்பளிப்பு பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன். காவல்துறையில் புகார் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் கூட நோயாளிக்கு இரவு காவலாளி, கை நரம்புகளில் குளுக்கோஸ் ஏற்ற வில்லை. குளுக்கோஸ் பாட்டில் காலியானதாக உறவினர்கள் கூறியதால் அவர் வேறு பாட்டிலை மாற்றியுள்ளார். மருத்துவ ரீதியாக இது தவறு. உறவினர்களும் குளுக்கோஸ் மாற்றுவது உள்ளிட்ட நோயாளிகள் பற்றிய விவரங்களை டாக்டர்களிடம் தான் தெரிவிக்க வேண்டும் என்றார்.