திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தம்
2 சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தப்பட்டது.
2 சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமண நிச்சயதார்த்தம் தடுத்து நிறுத்தப்பட்டது.
குழந்தை திருமணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது.
வறுமையின் காரணமாக படிக்கும் போதே பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளில் படிப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்படைகின்றனர்.
எனவே குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செய்யாறு அருகே சிறுமி ஒருவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடத்த வீட்டினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமிக்கு 18 வயது ஆகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிச்சயதார்த்தத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பள்ளி மாணவி
இதேபோல கீழ்பென்னாத்தூர் அருகே ஒரு கிராமத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்தனர்.
அதன்படி நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.
தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கு சென்று நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் பெற்றோருக்கு அறிவுரை வழங்கினர்.
2 சிறுமிகளையும் மீட்டு காப்பகத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் அந்தந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.