போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பிறப்பித்தார்.
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பிறப்பித்தார்.
பா.ஜனதா நிர்வாகி கொலை
நெல்லை பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 34). இவர் பா.ஜனதா கட்சி இளைஞர் அணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த மாதம் 30-ந்தேதி இரவு மூளிக்குளத்தில் நின்று கொண்டிருந்த ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மூளிக்குளத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் முன்விரோதத்தில் கொலை செய்தது தெரியவந்தது.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் தி.மு.க. பிரமுகரை கைது செய்யும் வரை ஜெகன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து பிரபு உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 5 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் ஜெகன் உடலை உறவினர்கள் நேற்று முன்தினம் பெற்றுக் கொண்டனர்.
பணி இடைநீக்கம்
இந்த நிலையில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான (கூடுதல் முழு பொறுப்பு) பிரவேஷ்குமார், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் தரப்பினருக்கும், பிரபு தரப்பினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை நிலவி வந்தது. சமீபத்தில் உளவுத்துறையினர் எச்சரிக்கை தகவல் தெரிவித்து உள்ளனர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து உள்ளனர். ஆனால், அவர்களை விடுவிக்காமல், அப்போது அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த கொலை சம்பவத்தை தடுத்திருக்கலாம் என தகவல் வெளியானது. இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியனை, டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் ெதரிவித்தன.