ரூ.1,000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் பணி இடைநீக்கம்
புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நாகர்கோவில்:
புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வருவாய் ஆய்வாளர்
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தோவாளை வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய் ஆய்வாளராக மந்திரமூர்த்தி என்பவர் பணியாற்றி வந்தார். இந்த வட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக புதிதாக 150-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. இந்தநிலையில் வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி, ஒரு பயனாளியிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.
அந்த ஆடியோவில் ரேஷன்கார்டு வாங்கும் நபரும், மந்திரமூர்த்தியும் உரையாடும் வகையில் இருந்தது. அதாவது பயனாளி பேசும் போது, ரேஷன்கார்டு பெற ரூ.100 போதுமா என கேட்க, அதற்கு மறுமுனையில் பேசிய அதிகாரி மந்திரமூர்த்தி கூடுதலாக ஒரு பூஜ்ஜியம் சேர்த்து ரூ.1000-ம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கூறுகிறார்.
பணியிடை நீக்கம்
ரேஷன் கார்டு வழங்க அதிகாரி லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் சென்றது. பின்னர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா உத்தரவிட்டார்.
ரேஷன்கார்டு வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.