கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம்
உடன்குடி கூட்டுறவு சங்க செயலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஆண்டு நடந்த நகைக்கடன் முறைகேடு சம்பந்தப்பட்ட சுமார் ரூ.19 லட்சம் மதிப்புள்ள நகைகளை பினாமி பெயரில் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிலர் மறு அடமானம் வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க மோசடி விசாரணை முடியும் வரை, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க லாக்கரில் பாதுகாப்பாக வைத்துள்ள நகைகளை அதிகாரிகள் அனுமதியில்லாமல் திரும்ப கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் விடுப்பில் சென்ற சமயத்தில் சில பணியாளர்கள் இந்த நகைகளை முறைகேடாக திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உடன்குடி கூட்டுறவு சங்கத்தில் அதிரடி ஆய்வு நடத்திய தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் சங்க செயலாளர் ஆனந்தராஜ் நவமணி ராபின் என்பவரை பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர்.