மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் வளையல் விற்ற லீலையில் சுவாமி காட்சி
மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் வளையல் விற்ற லீலையில் சுவாமி காட்சியளித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை வளையல் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கண்ணன் பட்டர் வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவில் வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-
தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று ஆணவம் கொண்டிருந்தனர். அந்த ஆணவத்தை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகிலேயே மயங்கி ஆடைகளையும், அணிகலன்களையும் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலேயே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.
அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரை யிலேயே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் தீர்ந்து சிவலோகம் சென்றதாக வரலாறு கூறுகிறது.