ஆடியோவில் உள்ளது தன் குரல் அல்ல என சுவாதி மறுப்பு


ஆடியோவில் உள்ளது தன் குரல் அல்ல என சுவாதி மறுப்பு
x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று மதுரை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஒரு ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று அவர் தெரிவித்தார். ஒரே குரல்தான் என்பது உறுதியானால் சிறையில் அடைப்போம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மதுரை

மதுரை,

கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று மதுரை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில் சுவாதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஒரு ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என்று அவர் தெரிவித்தார். ஒரே குரல்தான் என்பது உறுதியானால் சிறையில் அடைப்போம் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேல்முறையீட்டு வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர்கோகுல்ராஜ். என்ஜினீயரான இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் மதுரை ஐகோர்ட்டுக்கு சுவாதியை போலீசார் நேற்று காலை 9.30 மணி அளவில் அழைத்து வந்தனர். அங்கு நீதிபதி அறையில் இருந்தார்.

கோர்ட்டில் ஆஜர்

பின்னர் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு, காலை 10.50 மணி அளவில் சுவாதி ஆஜரானார்.

அவரிடம் சத்தியபிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது தன் குழந்தைகள் சாட்சியாக உண்மையை மட்டும் தெரிவிப்பேன் என்று எடுக்கும்படி தெரிவித்தனர்.

பின்னர் நீதிபதிகளின் கேள்விகளுக்கு சுவாதி அளித்த பதில் விவரம் வருமாறு:-

நீதிபதிகள்:- எந்த கல்லூரியில், என்ன பாடப்பிரிவில் படித்தீர்கள்?

சுவாதி:- திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பை கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை படித்தேன்.

நீதிபதிகள்:- உங்கள் வகுப்பில் கோகுல்ராஜ் என்பவரும் படித்தாரா?

சுவாதி:- ஆம். கோகுல்ராஜ் என்னுடைய சக மாணவர் தான்.

நீதிபதிகள்:- கோகுல்ராஜ் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியுமா?

சுவாதி:- அவரது குடும்பப்பின்னணியை பற்றி எதுவும் தெரியாது.

நீதிபதிகள்:- கடந்த 23.6.2015 அன்று கோகுல்ராஜை நீங்கள் சந்தித்தீர்களா?

சுவாதி:- இல்லை.

வீடியோ காட்சிகள்

இதையடுத்து ஒரு வீடியோவை சுவாதிக்கு போட்டு காண்பிக்குமாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்த வீடியோவில், இளம்பெண், வாலிபருடன் கோவிலுக்குள் வரும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அதில் உள்ள பெண் நீங்கள் தானே? என நீதிபதிகள் கேட்டதற்கு, இல்லை என சுவாதி மறுத்தார்.

அந்த பெண்ணுடன் வருவது கோகுல்ராஜ் தானே? என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு சுவாதி, அவர் போல் இருக்கிறது. ஆனால் அவரா என்பது தெரியவில்லை, என்றார்.

அழுதார்

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக மாஜிஸ்திரேட்டுவிடம் நீங்கள் வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். அதில், கோகுல்ராஜூடன் கோவிலுக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளீர்கள். தற்போது அவற்றை கூற மறுக்கிறீர்கள் என்றனர்.

அதற்கு சுவாதி, நான் எதையும் மறைக்கவில்லை. எனக்கு நினைவில் இருப்பதை சொல்கிறேன். போலீசார் எழுதி கொடுத்ததை மாஜிஸ்திரேட்டுவிடம் சொன்னேன் என்று கூறி அழுதார்.

பின்பு நீதிபதிகள், உங்களுக்கு போலீசார் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது குற்றவாளிகள் தரப்பிலா? என கேட்டதற்கு, யாரும் அழுத்தம் தரவில்லை. போலீசார் சொல்லியதை அப்படியே செய்தேன், என்றார்.

ஆடியோ உரையாடல்

பின்னர் சிறிது நேரம் கழித்து ஆடியோ உரையாடல் ஒன்றும் சுவாதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.

அந்த ஆடியோவில் இருக்கும் பெண் குரல் உங்களுடையது தானே? என்ற கேள்விக்கு சுவாதி, அது என் குரல் இல்லை என்றார்.

இதனால் கோபம் அடைந்த நீதிபதிகள், "ஆடியோவில் உள்ள பெண் குரலையும், உங்களுடைய குரலையும் பரிசோதனைக்கு அனுப்பி, உண்மை தன்மையை கண்டறிவோம். இரண்டும் ஒரே குரல் என்றால் உங்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்க நேரிடும்" என்று எச்சரித்தனர்.

மேலும், சத்தியப்படி வாழ வேண்டும். சத்தியம், நியாயம், தர்மத்தை கடைபிடிப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.

அதற்கு சுவாதி, கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நான் நடக்கவில்லை என்றார்.

இவ்வாறு நீதிபதிகளின் கேள்விகளுக்கு சுவாதி பதில் அளித்தார்.

பரிசோதனை

பகல் 12.45 மணியான போது, 15 நிமிடங்கள் இடைவெளிக்குப் பின்பு மீண்டும் விசாரணை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்து, தங்களது அறைக்கு சென்றனர்.

இதற்கிடையே சுவாதி தனக்கு தலை சுற்றல் இருப்பதாக தெரிவித்தார். இதனால் அவரை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அங்குள்ள டாக்டர்கள் அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை நடத்தினர்.

அப்போது அரசு தரப்பில் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எதிரான ஆதாரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்

உணவு இடைவேளைக்கு பிறகு நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு (புதன்கிழமை) ஒத்தி வைக்கிறோம்.

அன்றைய தினமும் சுவாதியை ஆஜர்படுத்த வேண்டும். வேறு ஏதாவது தகவல்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

சுவாதிக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Related Tags :
Next Story