கார் மோதி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் பலி


கார் மோதி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் பலி
x

க.பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதில் சிறுவன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கரூர்

கார் மோதல்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், செங்கோத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 40). இவர் கரூர் மாவட்டம் க.பரமத்தியில் சொந்தமாக ஸ்வீட்ஸ் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை ஜெயகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில், தனது கடையில் வேலை பார்க்கும் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பரசேரியை சேர்ந்த மணிகண்டனை (45) என்பவரை கூட்டிக்கொண்டு கேரளாவிற்கு புறப்பட்டார்.

க.பரமத்தி காட்டுமுன்னூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திருப்பூரில் இருந்து கரூரை நோக்கி வந்த கார் ஜெயகிருஷ்ணன், மணிகண்டன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி தலை குப்புற கவிழ்ந்தது.

ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஜெயகிருஷ்ணனை உடலை க.பரமத்தி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம்

காரை கோவை மாவட்டம், சுண்டக்காமுத்தூரை சேர்ந்த கிஷோர் மகன்ரித்திக் ஹெய்டன் (18) ஓட்டி வந்தார். இவருடன் இவரது உறவினர் திருப்பூரை சேர்ந்த விபின் ரெனால்டு (14) வந்தார். கார் கவிழ்ந்ததில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களும் மீட்கப்பட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story