குளச்சலில் விசைப்படகுகளில் சிக்கிய வாளை மீன்கள் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர்
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் வாளை மீன்கள் அதிகம் கிடைத்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
குளச்சல்:
குளச்சலில் விசைப்படகு மீனவர்கள் வலையில் வாளை மீன்கள் அதிகம் கிடைத்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
விசைப்படகுகள்
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி இருந்து மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும்.
தற்போது விசைப்படகுகளில் கணவாய், புல்லன், கேரை போன்ற மீன்கள் கிடைக்கும் சீசனாகும்.
வாளை மீன்கள்
கடந்த வாரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளில் 20 விசைப்படகுகள் நேற்று காலையில் கரை திரும்பின. அவற்றில் சூரை, புல்லன், வாளை, ஆயில் சுறா, கேரை ஆகிய மீன்கள் கிடைத்திருந்தன. இந்த மீன்களை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ புல்லன் மீன் ரூ.45 முதல் ரூ.50 வரை விலை போனது.
கேரை மீன்கள் தலா 40 கிலோ முதல் 90 கிலோ வரை எடையிருந்தது. இது கிலோ ரூ.230 வரை விலை போனது. இந்த மீன்கள் கடந்த வாரம் ரூ.250-க்கு விற்பனையானது. வாளை மீன்கள் தலா கிலோ ரூ.100 வரை விலைபோனது. வாளை மீன்களுக்கு வெளியூர் மீன் சந்தையில் நல்ல மவுசு உள்ளதால் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.
இந்த மீன்களை கருவாடு மற்றும் மீன் எண்ெணய்க்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.