தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்


தர்மபுரி  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்-கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

குடற்புழு நீக்க மாத்திரைகள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்த முகாமை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

1 முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. குழந்தைகள், சிறுவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் மிகவும் பயன் அளிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

சாப்பிடும் உணவில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலுக்கு முழுமையாக கிடைப்பதற்கு ஏதுவாக குடலில் உள்ள புழுக்களை அழிப்பதற்கு இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதை மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் சாப்பிட்டு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ரத்த சோகையை தடுக்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும், அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இது குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நடைபெறும். அன்று அனைத்து குழந்தைகள், மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை தவறாமல் வழங்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

5 லட்சத்து 15 ஆயிரம் பேர்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தெரசாள் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நேற்றைய முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1 லட்சத்து 22 ஆயிரம் பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.


Next Story