மணல் குவாரி நிர்வாகத்திற்கு தாசில்தார் அறிவுரை
மணல் குவாரி நிர்வாகத்திற்கு தாசில்தார் அறிவுரை வழங்கினார்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றிச்செல்லும் லாரிகள் தார்ப்பாய் போட்டு மூடிச் செல்லாததால், வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் சாலையோரம் உள்ள ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை வாழைக்குறிச்சி மணல் குவாரியில் இருந்து லாரிகள் வெளியில் வரும் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது லாரிகள் அனைத்தும் தார்ப்பாய் போட்டு செல்லப்படுகிறதா? என்பதை உறுதி செய்தார்.
மேலும் தார்ப்பாய் போடாமல் எந்த மணல் லாரியும் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது எனவும், மணல் குவாரி நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கினார். விதிகள் மீறி நடந்துகொண்டால் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் எனக் கண்டிப்புடன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது வாழைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பரணி குமார் உடன் இருந்தார்.