கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் உத்தரவு
கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தார் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் நுராம்பட்டி ஏந்தலில் உள்ள கண்மாயின் மூலம் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் பகுதிகளில் பாசனம் செய்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கண்மாயின் அருகில் தனி நபர் ஒருவரால் பிளாட் போடப்பட்டதாகவும், அதற்கு பாதை இல்லாததால் கண்மாயின் நடுவே சாலை அமைப்பதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேலிடமும், வருவாய் துறையினரிடமும் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேர்மன் சண்முகவடிவேல், மாவட்ட கவுன்சிலர் ரவி மற்றும் கிராம மக்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சேர்மன் சண்முகவடிவேல் சாலை அமைக்கும் பணியை நிறுத்த அரசு அலுவலர்களின் மூலமாக நடவடிக்கை எடுத்ததின் பேரில் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன் கண்மாயில் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்த நபர் மீது கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கண்மாயில் ஜே.சி.பி எந்திரம் மூலம் பாதை அமைக்கப்பட்டதை உடனடியாக சரி செய்யுமாறு உத்தரவிட்டார்.