சமாதான கூட்டம் நடத்துவதாக கூறி குறுநில மன்னர் போல் தாசில்தார்கள் செயல்படுகின்றனர் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
சமாதான கூட்டம் நடத்துவதாக கூறி குறுநில மன்னர்களைப்போல தாசில்தார்கள் செயல்படுகின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சமாதான கூட்டம் நடத்துவதாக கூறி குறுநில மன்னர்களைப்போல தாசில்தார்கள் செயல்படுகின்றனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கோவில் விழா
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள உருவாட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 27-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரை திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மண்டகப்படிகள் அமைத்து பூஜைகள் நடத்தி வழிபடுவார்கள்.
இதற்காக கோவிலின் உள்பிரகாரத்திலும், வெளியிலும் சுவாமி வலம் வருவதற்கு வசதியாக சப்பரம் (தேர்) உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய சப்பரம் நல்ல நிலையில்தான் உள்ளது. ஆனால் தற்போது புதிய சப்பரம் வாங்கப்பட்டு உள்ளது. அதேபோல இந்த ஆண்டு நடக்க உள்ள திருவிழாவின்போது தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினருக்கு 9-வது நாள் திருவிழாவை நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.
சமாதான கூட்டம்
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் 6-ம் நாள் திருவிழாவில் மண்டகப்படி அமைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என கேட்டோம். ஆனால் அனுமதிக்க மறுத்து அவமதித்தனர். எனவே கோவில் திருவிழாவின் 6-ம் நாளன்று பூஜை நடத்த அனுமதிப்பது குறித்து அனைத்து சமுதாய மக்களை அழைத்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தி முடிவு எடுக்கவும், திருவிழாவில் பழைய சப்பரத்தை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
குறுநில மன்னர்கள்
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சமாதான கூட்டம் நடத்துவதாக கூறி தாசில்தார்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என கருத்து தெரிவித்தனர்.
பின்னர் தாசில்தார்கள் சமாதானம் கூட்டம் நடத்துவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதா? இதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? என்பது குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.