3 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
ஊராட்சி செயலாளர்கள் 3 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் வரி வசூல், மின்விளக்கு பராமரித்தல், 100 நாள் வேலைத்திட்டம், முழு சுகாதாரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி செயலாளர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாகவும், ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் மாத ஊதியம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து வலங்கைமான் ஊராட்சி செயலாளர் சங்க ஒன்றிய தலைவர் சித்தார்த்தன் கூறுகையில், ஊராட்சி செயலாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டப்பணிகளை ஓய்வின்றி செய்து வருகின்றனர். அவர்களது பணிச்சுமையை குறைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களின் ஊதியத்தை கருவூலம் மூலமாக வழங்க முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த விடுப்பு போராட்டம் நடக்கிறது என்றார். அப்போது சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் சேரன் ஆகியோர் உடன் இருந்தனர்.