இருக்கக்கூடிய காலத்தில் பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் :கண் கலங்கி பேசிய கலெக்டர்
இருக்கக்கூடிய காலத்தில் பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்று சிதம்பரத்தில் நடந்த விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார். அப்போது அவர் கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் தமிழ் இணையக்கல்விக் கழகம் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு திட்டம் என்ற பெயரில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் நல்ல சிந்தனைகள், நல்ல மனம், அடுத்தவருக்கு உதவி செய்யும் எண்ணம் ஆகியவை இருக்க வேண்டும். தோல்வியே வந்தாலும் வெற்றியை நோக்கி செல்ல இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும்.
நேரம்பார்க்காமல் உழைக்க வேண்டும்
மாணவ, மாணவிகள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். கிடைத்த வேலையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உழையுங்கள் மனம் தளராமல் உழைத்தால் வெற்றி கிட்டும். யாரையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நன்கு உழைத்து நாம் மேலே வந்தால் அதுவே பெற்றோருக்கு செய்யும் கடமை ஆகும். எனது தந்தை அரசு அதிகாரியாக பணியாற்றியதால் நான் அதிகமாக தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தேன். தாத்தா, பாட்டியிடம் காட்டிய அன்பை பெற்றோர்களிடம் வெளிப்படுத்தியது இல்லை.
மக்களுக்காக உழைக்க வேண்டும்
எனது தந்தை நான் சம்பாதிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்கவில்லை. நேர்மையான அதிகாரியாக இருக்க வேண்டும், மக்களுக்காக உழைக்க வேண்டும் என கூறி வளர்த்தார்.
நான் நேர்மையான அதிகாரியாக செயல்படுகின்றேன். சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லை. எனது தந்தையை பார்த்து பெருமைப்படுகின்றேன். இன்றும் என்னுடைய கணக்கில் தந்தை பணம் போட்டு வருகின்றார். இன்று வரை எனது பெற்றோர் என்னை பார்த்துக் கொள்கின்றனர். சின்ன விஷயத்தில் கூட என்னிடம் பெற்றோர் எதிர்பார்ப்பதில்லை. குழந்தைகளுக்கு பாசம், அன்பு ஆகியவற்றை சிறிய வயதில் இருந்தே ஊட்டி வளருங்கள். இதை தற்போது நான் தந்தையாக எனது குழந்தையிடம் செய்து வருகின்றேன்.இருக்ககூடிய காலத்தில் பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என கண் கலங்கினார்.
வீடியோ வைரல்
நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சிங்காரவேல், இந்திய மொழியியல் புல முதன்மையர் அரங்க பாரி, சிதம்பரம் தாசில்தார் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கிடையே கலெக்டர் அருண்தம்புராஜ் கண்கலங்கி பேசிய வீடியோ பதிவு, தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.