அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
நெல்லையில் அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
நெல்லையில் அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகம்
மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு தலைமையில் அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பயிற்சி உதவி கலெக்டர்கள் கோகுல், ஷீஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி- மின்வாரிய அலுவலகம்
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் மாநராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பில் தியாகராஜ நகரில் உள்ள மத்திய அலுவலக வளாகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
தலைமை பொறியாளர் (பொறுப்பு) குருசாமி தலைமை தாங்கினார். இதில் மேற்பார்வை பொறியாளர்கள் தாமோதரன், செல்வராஜ், ரமேஷ், செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் அலுவலகங்கள்
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கிழக்கு துணை கமிஷனர் சீனிவாசன், மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், தலைமையிடத்து துணை கமிஷனர் மற்றும் போலீஸ் அதிகாரிகள், காவல்துறை அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதேபோல் பல்வேறு அரசு அலுவலகங்களில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.