தாளடி, சம்பா சாகுபடி பணிகள் மும்முரம்
மணல்மேடு பகுதியில் தாளடி, சம்பா சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
மணல்மேடு பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அறுவடை முடிந்த நிலையில் தற்போது தாளடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் 75 சதவீதம் நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 25 சதவீதம் மட்டுமே ஆற்று நீர் பாசனத்தில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் இப்பகுதியில் குறுவை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது தாளடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பா சாகுபடி
இதேபோல, பல்வேறு இடங்களில் சம்பா நடவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சில இடங்களில் நாற்றங்கால் பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தாளடி மற்றும் சம்பா நடவு பணிகளை முடிப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக மணல்மேடு, திருவாளப்புத்தூர், பட்டவர்த்தி, தலைஞாயிறு, வில்லியநல்லூர், நாராயணமங்கலம், காளி, திருமங்கலம், கடலங்குடி, ஆத்தூர், வக்காரமாரி, சித்தமல்லி, கொற்கை, முடிகண்டநல்லூர் உள்பட50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா மற்றும் தாளடி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அவ்வப்போது பெய்து வரும் மழை விவசாயத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.