தலை துண்டாகி சாலையில் இறந்து கிடந்த வாலிபர்


தலை துண்டாகி சாலையில் இறந்து கிடந்த வாலிபர்
x

அஞ்சுகிராமம் அருகே தலை துண்டான நிலையில் சாலையில் இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே தலை துண்டான நிலையில் சாலையில் இறந்து கிடந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலையில் வாலிபர் பிணம்

அஞ்சுகிராமம் அருகே உள்ள ரஸ்தாகாடு பைபாஸ் வடக்கு பகுதியில் விபத்து நடந்ததாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது, தலை துண்டான நிலையில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. வாலிபரின் உடல் சாலையிலும், தலை சாலைேயாரத்திலும் கிடந்தது. அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் சேதமான நிலையில் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். முதலில் இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது. போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் இறந்தவர் அஞ்சுகிராமத்தை அடுத்த காணி மடத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (வயது21) என்பது தெரிய வந்தது.

திருவிழாவுக்கு வந்தவர்

இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு கேரளாவில் வடை, சம்சா உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்து வந்தார். தற்போது ஊரில் கோவில் திருவிழா நடைபெறுவதால் அதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிவிட்டு சிறிது நேரத்தில் வருவதாக கூறிவிட்டு சென்றார். இந்தநிலையில் அவர் சாலையில் தலை துண்டான நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரகாஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கண்காணிப்பு கேமரா

அவரது தலை துண்டான நிலையில் உள்ளதால், அவரை யாராவது திட்டமிட்டு கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல் ஜோடித்து உள்ளார்களா? எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் உள்ள தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த சாலைப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். சாலையில் தலை துண்டான நிலையில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story