தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது -புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
தக்கலை அருகே வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று பேசினார்.
தக்கலை:
தக்கலை அருகே வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று பேசினார்.
பட்டமளிப்பு விழா
வெள்ளிமலை இந்துதர்ம வித்யாபீடம் சார்பில் 33-வது வித்யா ஜோதி பட்டமளிப்பு விழா மற்றும் 42-வது சமய வகுப்பு மாணவர் மாநாடு தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் தென்கரைதோப்பு முத்தாரம்மன் கோவிலில் இருந்து பஜனை ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது விழா மேடைக்கு வந்த பிறகு சுவாமி கேசவானந்தஜி மகராஜ் காவி கொடியையும், செல்வசிவலிங்கம் தேசிய கொடியையும் ஏற்றினர். இதையடுத்து பட்டமளிப்பு வேள்வி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தமிழிசை சவுந்தரராஜன்
தொடர்ந்து நடந்த விழாவிற்கு வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி சிவாத்மானந்தஜி மகராஜ் அறிக்கை வாசித்தார். ஜெயா ராமச்சந்திரன் உறுதிமொழி எடுத்தார். மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். சமய வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற 15 மாணவர்களுக்கு சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் வித்யா ஜோதி பட்டத்தை வழங்கினார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு வித்யாஜோதி கேடயத்தை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
150 நாடுகளுக்கு தடுப்பூசி
குமரி மண் எனது தந்தை வீடு, நெல்லை தாய்வீடு, சென்னை சகோதர வீடு, கோவை நான் புகுந்த வீடு, இந்த குமரி மண்ணில் ஆன்மிகம் தழைத்து நிற்கிறது. தமிழகத்தில் இந்து தர்மத்தை பற்றியும், ஆன்மிகத்தை பற்றியும் பேசுவது ஏதோ தவறானது என்ற மாய தோற்றம் இருக்கிறது. அதை அகற்ற வேண்டும். ஆன்மிகம்தான் நமக்கு பலம். கவர்னராக இருப்பவர் இப்படி பேசலாமா என கேட்பார்கள்.
நான் கவர்னராக இருந்தாலும் தமிழகத்தின் மகள். தமிழகத்தின் பண்பாட்டை மீட்டெடுப்பதில் என் பங்கு என்றுமே இருக்கும். ஒருவரின் எழுச்சி இன்னொருவரின் வீழ்ச்சி அல்ல. பெரும்பான்மையினரின் நம்பிக்கையை அவமதிக்கும்போது நாம் எழுச்சி கொள்ள வேண்டும். கொரோனா வந்த 11-வது மாதத்தில் நம் நாடு தடுப்பூசியை கண்டுபிடித்தது. அதை நாம் போட்டு கொண்டதோடு மட்டுமல்லாது உலகத்தில் 150 நாடுகளுக்கும் கொடுத்தோம்.
ஆன்மிகத்தை தமிழையும்...
ஆன்மிகத்திற்கும், தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார்கள். இல்லை நீங்கள் வளர்ப்பதற்கு முன்பே ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆன்மிக தமிழை வளர்த்தார்கள். உயிரையும், உடலையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல்தான் ஆன்மிகத்தையும், தமிழையும் பிரிக்க முடியாது.
நாம் கோவிலுக்கு போவதை வெளிப்படையாக சொல்வோம். இப்போது கூட நான் சொல்கிறேன் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மண்டைக்காடு அம்மனை தரிசனம் செய்துவிட்டு, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு சென்று விட்டு தான் செல்வேன். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என சொல்பவர்கள் நடத்தும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ராகுகாலம், நல்லநேரம் பார்த்துதான் செய்கிறார்கள்.
குரல் கொடுக்க வேண்டும்
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் முடிவு செய்யவேண்டிய ஒன்று. ஆனால் ஜனநாயக நம்பிக்கை கொண்டவர்கள் என சொல்லி கொள்பவர்கள், இவர்களுக்குத்தான் ஓட்டுப் போடவேண்டும் என கட்டாயப்படுத்துவதை கேட்டுக்கொண்டு வாய் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது பண்பாடும் கலாசாரமும் ஒடுக்கப்படும்போதும், மறைக்கப்படும்போதும் அதற்கு எதிராக நாம் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், தொழிலதிபர் என்ஜினீயர் விஜி, பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் உண்ணிகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் குமாரதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதம், கவுன்சிலர் ஷீபா, கிருஷ்ணன் வகை பா.ஜனதா தலைவர் கொ.சி.ராமதாஸ் மற்றும் வித்யாபீட நிர்வாகிகள், சமய வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், ஆன்மிக தலைவர்கள், ஊர் பெரியவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.