தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா பேரணி


தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா பேரணி
x

ராணிப்பேட்டையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா பேரணியை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா பேரணியை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார தொடக்க விழா நடந்தது. முதல் நாளான நேற்று திருவள்ளுவர் சிலை அருகே அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் அறிஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழி தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

பேரணியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து, அகவை முதிர்ந்த தமிழ் அறிஞருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.

பேரணியில் வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் அரசினர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி மொழி என்றால் உயிரின் நரம்பு! முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு!!, இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே, தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தாயினுஞ் சிறந்தது தமிழே! தரணியிலுயர்ந்தது தமிழே!! என்ற விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறே நவல்பூர் வழியாக முத்துக்கடை பேருந்து நிறுத்தம் வரை சென்றனர்.

நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் நாகராசன், தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவ -மாணவிகள், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story