'தமிழகம் போதைப்பொருள்விற்பனை சந்தையாக மாறியுள்ளது': கடம்பூர் ராஜூ
தமிழகம் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கோவில்பட்டி:
தமிழகம் போதைப்பொருள் விற்பனை சந்தையாக மாறியுள்ளதாக, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கோவில் கொடைவிழா
கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி.காலனி அம்மச்சியார் அம்மன் கோவில் கொடை விழாவினை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அவருடன் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சத்யா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
போதைப்பொருள் சந்தை
தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் போதைப்பொருள் விற்பனை செய்யும் சந்தையாக மாறி விட்டது. சட்டமன்ற கூட்டத் தொடரில் போலீஸ் மானியக் கோரிக்கையின்போது, இது குறித்து புள்ளி விபரங்களுடன், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுட்டி காட்டினார்.
வயது வித்தியாசம் இல்லமால் பள்ளி மாணவர்கள் வரை போதை பழக்கத்திற்கு உள்ளாகும் மோசமான புதியகலாச்சாரம் உருவாகி வருகிறது. அரசு விழிப்புணர் வுடன் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதற்கு உரிய பதில் கூறாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமாளித்தார்.
பதவி விலக வேண்டும்
கடந்த 1980-ம் ஆண்டுக்கு பிறகு கள்ளச் சாரயத்தினால் உயிரிழப்பு இப்போதுதான் நிகழ்ந்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று தி.மு.க. அரசு பதவி விலகி இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் இன்றைக்கு தினமும் தீவிரவாதம், வன்முறை, கொலை, கொள்ளை, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் சிந்துபாத் கதை போல தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகம் அபாயத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பதை இது போன்ற நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. கொள்ளை சம்பவம் என்பது அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டது. காவல்துறை செயல்படுகிறதா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது'என்றார்.