தமிழ் மொழி என்பது தானே தோன்றிய மொழி


தமிழ் மொழி என்பது தானே தோன்றிய மொழி
x

தமிழ்மொழி என்பது பிற மொழியில் இருந்து உருவானது அல்ல. தானே தோன்றிய மொழி என்று அமைச்சர் தங்கம் ெதன்னரசு பேசினார்.

திருவண்ணாமலை

தமிழ்மொழி என்பது பிற மொழியில் இருந்து உருவானது அல்ல. தானே தோன்றிய மொழி என்று அமைச்சர் தங்கம் ெதன்னரசு பேசினார்.

தமிழர் திருநாள் விழா

திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலை அருணகிரிநாதர் அரங்கத்தில் அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருநாள் விழா இன்று நடைபெற்றது.

விழா காலை முதல் இரவு வரை நடந்தது. காலை திருவான்மியூர் எம்.பாலசுப்பிரமணி குழுவினரின் நாதஸ்வர இசை சங்கமம் நடைபெற்றது. தொடர்ந்து சரண்யா குழுவினரின் பரதநாட்டியம் நிகழ்ச்சியும், பின்னர் சுகி.சிவம் நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்த பட்டிமன்றம் வீட்டையும், நாட்டையும் வளப்படுத்துவோர் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நடந்தது.

மாலையில் அம்பேத்கர் வழங்கும் வீரத்தமிழன் குழுவினரின் போர்பறை நிகழ்ச்சியும், புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் சார்பில் மாபெரும் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து மாலதி மெலோடீஸ் வழங்கும் இன்னிசை கிராமிய இசை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலைமாமணி மாலதி, கலைமாமணி சின்னபொன்னு, கலைமாமணி வேல்முருகன், ஆண்டிப்பட்டி பாடல்புகழ் செந்தில்தாஸ், ஜெய்கிருஷ் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு பாடல்களை பாடினர்.

பொற்கிழி

அதனைத்தொடர்ந்து அருணை தமிழ்ச்சங்க தலைவரும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான எ.வ.வேலு தலைமையில் தமிழ்த் தொண்டு, சமூக தொண்டு, கலை, ஆன்மிக தொண்டாற்றிய சாதனையாளர்களுக்கு விருது, பொற்கிழி மற்றும் கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

செயலாளர் வே.ஆல்பர்ட், பொருளாளர் எம்.இ.ஜமாலுதீன், இணைச் செயலாளர் எ.வ.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு கலந்து கொண்டு விருது மற்றும் பரிசுகளை வழங்கி விழா பேருரையாற்றினார்.

தமிழ் தொண்டிற்கான மறைமலை அடிகள் விருது கவிஞர் பரமசிவன் என்பவருக்கும், சமூக தொண்டிற்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது முனைவர் மணிமாறன் என்பவருக்கும், கலைத் தொண்டிற்கான கலைவாணர் விருது முனைவர் குமார் என்பவருக்கும், ஆன்மிக தொண்டிற்கான கிருபானந்த வாரியார் விருது தங்க. விஸ்வநாதன் என்பவருக்கும் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

பக்தி, இலக்கியம்

அருணை தமிழ் சங்கம் மதங்களுக்கு அப்பாற்பட்டு நடத்தப்படுகின்ற அமைப்பு. திறமையாக தொண்டாற்றியவர்களை நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு உள்ளது.

மூவேந்தர்களில் தமிழை வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள். முதற் சங்கம், இடை சங்கம், கடை சங்கம் எதுவாக இருந்தாலும் பாண்டிய மன்னர்கள் தமிழை வளர்த்ததற்கான சான்றுகள் உள்ளன.

இன்றைக்கு தமிழர்களின் நெறிகளை வளர்ப்பதற்காக பல்வேறு வரலாறுகள் சொல்லப்படுகிறது.

அருணை தமிழ் சங்கம் சார்பில் பேரசிரியர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நான் பக்தி, இலக்கியம் குறித்து பேசினேன்.

பக்திக்கும், எனக்கும் தூரம் என்று அனைவரும் தெரியும். ஆனால் எனக்கு பக்தி, இலக்கியத்திற்கு தூரம் இல்லை. பக்தி இலக்கியங்களை, புத்தகங்களை படித்ததால் தான் நான் பகுத்தறிவாளனாக மாற முடிந்தது. தமிழ் ஒரு காலத்தில் பக்தி இலக்கியதால் வளர்ந்தது என்று மாற்று கருத்து கிடையாது.

தமிழ் உணர்வு

திருவாசகம், தேவாரம், அருட்பா, கம்பராமாயணம் போன்றவை தமிழை வளர்த்து உள்ளது. கம்பராமாயணத்தின் இலக்கியத்தை நான் உணர்ந்த காரணத்தினால் தான் எனது சின்ன பிள்ளைக்கு இளங்கம்பன் என்று பெயர் வைத்தேன்.

திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் படித்தால் தான் தமிழ் உணர்வு இருக்க வேண்டியது இல்லை. காலத்திற்கு ஏற்ப தமிழ் உணர்வு இருக்க வேண்டும்.

இயற்தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் இந்த மூன்றையும் கொண்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். இதனால் தான் எங்களுக்கு சிறு வயதிலேயே அவர் மீது ஈர்ப்பு வந்தது. இளம் வளதில் எனக்கு தமிழ் மீது தாக்கம் இருந்ததால் தமிழை காதலியாக நினைத்து கன்னி தமிழே வா என்று பாடலை எழுதி இருந்தேன். திராவிட இயக்கம் ஆட்சி வந்த போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டினார்.

செம்மொழி

அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பஸ்களில் திருக்குறளை எழுதி படிக்க வைத்தவர் கலைஞர்.

மேலும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து என்ற பாடல் அரசு நிகழ்ச்சிகளில் இன்று வரை இசைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் மத்திய அரசாங்கம் மூலம் தமிழ்மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. அந்த வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

அருங்காட்சியகம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கும், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பெரிய தொடர்பு எப்போது உண்டு. அதாவது ஆன்மிக உலகில் பெரிதும் போற்றப்படுகின்ற ரமண மகரிஷி திருச்சுழியில் பிறந்தவர்.

தமிழர் நாகரீகத்தையும், பண்பாட்டை உணர்த்த கூடிய கீழடி நாகரீகத்தை குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்வதற்கான பணியினை தமிழக முதல்-அமைச்சர் செய்து வருகிறார். கீழடி அகழ்வாய்வின் போது 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுத தெரிந்த தமிழினம் இருந்தது என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதற்கான சான்று நிறுவ வேண்டும் என்று சட்டமன்றத்தில் அதற்கான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு அருகாட்சியகம் அமைவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்-அமைச்சர். இன்னும் சில தினங்களில் அந்த அருங்காட்சியகத்தை முதல்- அமைச்சரால் திறக்கப்பட உள்ளது.

இதற்கு முக்கிய பங்கு பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் உண்டு. அருணை தமிழ் சங்கம் சார்பில் விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

விருதாளர்களை தேர்வு செய்வது என்பது எவ்வளவு சிரமம் என்பது தமிழ் வளர்ச்சி துறை அமைச்சரான எனக்கு தான் தெரியும். தமிழ் வளர்ச்சித்துறையில் 80-க்கும் மேற்பட்ட விருதுகள் உள்ளன. விருதாளர்களை தேர்வு செய்யும் போது அவரால் அந்த விருதுக்கு பெருமையாக இருக்க வேண்டுமே தவிர, விருதால் அவருக்கு பெருமை இருக்க கூடாது.

மிக சிறப்பான விருதாளர்களை அருணை தமிழ் சங்கத்தினர் தேர்வு செய்து உள்ளனர்.

தானே தோன்றிய மொழி

தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு தமிழ் சங்கங்கள் இருக்கலாம். ஆனால் அருணை தமிழ் சங்கத்திற்கு தனி சிறப்பு உள்ளது. தமிழ் மொழி என்பது தானே தனக்குள் தோன்றிய மொழி. பிற மொழியில் இருந்து உருவானது இல்லை. கீழடியை பொருத்தவரையில் நாம் எழுத்தறவு பெற்றிருந்த சமுதாயம்.

தமிழில் எழுத தெரிந்த சாதாரண சமுதாயம் இருந்தது என்று கீழடி சொல்கிறது. இந்த அளவிற்கு தமிழின் வளர்ச்சி யாராலும் மறுக்க முடியாத இடத்தில் அறிவு தளத்தில் அமர்ந்து உள்ளதற்கு காரணம் யாரென்று சொன்னால் தமிழக முதல்- அமைச்சர் தான். கீழடி வைகை நதி நாகரீகத்தை சொல்வதை போல தெற்கே பொன்னி நதியின் நாகரீகத்தை சொல்வதற்கு அருங்காட்சியகம் அமைப்பட உள்ளது.

பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை கட்டிட கலையில் மறுமலர்ச்சியை கொண்டுள்ள கோவில் அருணாசலேஸ்வரர் கோவில். செங்கத்தில் தமிழில் பொறிக்கப்பட்ட காசுகள் கிடைத்து உள்ளது. அவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவண்ணாமலையில் மிக பெரிய பாரம்பரிய வரலாறு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கலெக்டர் முருகேஷ், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, முன்னாள் எம்.பி. த.வேணுகோபால், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், ஒ.ஜோதி, பெ.சு.தி.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story