'வாழ்வியல் வழிகாட்டியாக திகழும் தமிழ் இலக்கியங்கள்'
தமிழ் இலக்கியங்கள் வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கின்றன என்று திண்டுக்கல்லில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் கலெக்டர் விசாகன் புகழாரம் சூட்டினார்.
இலக்கிய கருத்தரங்கு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை நினைவுகூரும் இலக்கியக் கருத்தரங்கு, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். பின்னர் பேச்சு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் விசாகன் பேசுகையில், தமிழ் மொழியில் உள்ள இலக்கணம், இலக்கியங்கள் வேறு மொழிகளில் இல்லை. திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை தமிழுக்கு பெருமை சேர்ப்பதோடு, மனிதர்களின் வாழ்வுக்கும் வழிகாட்டியாக உள்ளன. தமிழ் இலக்கியங்கள் நமது வாழ்வியல் நெறிமுறைகளை தெளிவாக விளக்குகின்றன. எனவே தாய்மொழியான தமிழ் மொழியை நாம் நன்கு கற்று பிழையின்றி எழுதவும், பேசவும் வேண்டும்.
தமிழ் மொழியை நன்கு படிக்கும்போது, மற்ற மொழிகளையும் எளிதில் கற்றுவிட முடியும். தமிழறிஞர்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் தமிழறிஞர்களை பற்றிய கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே மாணவ, மாணவிகள் பாடங்களை நன்கு புரிந்து படிப்பதோடு, வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்றார்.
புத்தக கண்காட்சி
இந்த கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன். கல்லூரி முதல்வர் லெட்சுமி, தமிழ் பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ் இலக்கியங்கள், தமிழறிஞர்கள் பற்றிய புத்தகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன. அதனை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டதோடு வாங்கி சென்றனர்.