நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது; அமைச்சர் சிவசங்கர் பேச்சு


நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது; அமைச்சர் சிவசங்கர் பேச்சு
x

நாட்டிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் பேசினார்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 903 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,621 மாணவர்கள், 3,157 மாணவிகள் என மொத்தம் 5,778 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது.

மேலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் பெற்றோர்களுக்கு இணையாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, செந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செல்வ விநாயகம், ஆதிரை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story