தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை
மங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலியாக தமிழக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து கர்நாடக மாநிலம் மங்களூரு நகரின் நாகுரி பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ டிரைவரும், அதில் பயணித்த பயணியும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினர். ஆந்திராவில் இருந்து வரும் பஸ், கார், லாரிகள் ஆகியவை சோதனை செய்த பிறகு வேலூர் நோக்கி செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.
கார்களின் உள்ளே ஏதாவது தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் இருக்கிறதா அல்லது வெடி பொருட்கள் ஏதாவது உள்ளதா என போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் அங்குள்ள சோதனைச் சாவடி கண்காணிப்பு கேமராவில் படம்பிடிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.