தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை,
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு நேரடியாகச் சென்று மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர்களிலும் தவறாமல் பங்கேற்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுகிறார். இதனால் மக்கள் மத்தியில் பாராட்டுகளை உதயநிதி ஸ்டாலின் சம்பாதித்து வருகிறார். அப்போதிருந்தே அவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
மாநிலம் முழுவதும் சேவை
தி.மு.க. கட்சியிலும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். கடந்த நவம்பர் 27-ந் தேதி அவரது பிறந்த நாளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், இதற்கு முந்தைய பிறந்த நாட்களில் இல்லாத வகையில் காத்திருந்து வாழ்த்து தெரிவித்துச் சென்றனர்.
மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஏற்கனவே தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டால், தமிழக மக்கள் அனைவருக்கும் சேவையாற்றுவார் என்று தி.மு.க. கட்சியினரும் பேசுகின்றனர்.
இளைஞர் நலன்
இதுபற்றி உதயநிதி ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் பேசும்போது, 'நான் அமைச்சராவதை முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார்' என்று பதிலளித்தார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரை அமைச்சராக்குவதற்கான நல்ல தருணம் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, 14-ந் தேதியன்று அவர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையை அவருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றம்
தற்போதுள்ள அமைச்சரவை நிலவரப்படி 35 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். அதாவது மொத்தமுள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 சதவீதம் இடம், அமைச்சரவைக்கு ஒதுக்கப்படுகிறது. 35 அமைச்சர்கள் நியமிக்கப்படக் கூடிய நிலையில், தற்போது முதல்-அமைச்சர் உள்பட 34 அமைச்சர்கள் உள்ளனர். எனவே மீதமுள்ள ஒரு இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
அதுபோல, கடந்த 7.5.2021 அன்று தி.மு.க. அரசு அமைந்தது முதல் இதுவரை அமைச்சரவையில் இருந்து யாரும் நீக்கப்படவில்லை. கடந்த மார்ச் 29-ந் தேதியன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத்துறை பறிக்கப்பட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் வழங்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றம் தவிர வேறு மாற்றங்கள் செய்யப்படாத நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கி அமைச்சரவை விஸ்தரிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்கழிக்கு முன்பு...
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரிடம் கேட்டபோது, அவர் கைவசம் தற்போது சில திரைப்படங்கள் உள்ளன. அதையும் அவர் கவனிக்க வேண்டும். மார்கழி மாதத்தை தவிர்ப்பதற்காக கார்த்திகை மாதத்திலேயே புதிய பதவிக்கு வரலாம் என்றும் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். (டிசம்பர் 15-ந் தேதி கார்த்திகை முடிந்து, 16-ந் தேதி மார்கழி தொடங்குகிறது). எனவே பதவி ஏற்கும் நாள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.
உதயநிதி ஸ்டாலின் 27.11.1977 அன்று சென்னையில் பிறந்தார். அவருக்கு வயது 45. அவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், இன்பநிதி என்ற மகனும், தன்மயா என்ற மகளும் உள்ளனர்.