தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்று முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார். இதனையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கரூர் வருகை தருகிறார்.கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், வெங்கக்கல்பட்டி ஆகிய 4 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பயணியர் மாளிகையில் தங்குகிறார்
இதனைத்தொடர்ந்து பயணியர் மாளிகையில் கரூர் மாவட்டத்திற்குட்ட தொழில் முனைவோர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கோரிக்கைகளை கேட்டு, மனுக்களை பெற்றுகொள்கிறார். இரவு பயணியர் மாளிகையில் தங்குகிறார்.நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு பயணியர் மாளிகையில் இருந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய திருமாநிலையூர் அரங்கம் வரை 23 இடங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 76 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.மேலும் கரூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றுகிறார்.