தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன், பொருளாளர் விஸ்வநாதன், துணைச் செயலாளர் அண்ணாதுரை, துணைத்தலைவர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், டெல்லியில் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி நடைபெறும் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்களின் பேரணியில் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 100 பேர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியில் போதிய மழை இல்லாமல், தண்ணீர் வரத்து இல்லாமல் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் சாவியாகி விட்டது. சாவி ஆகிப்போன பயிர்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான கணக்கெடுப்புகளை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுகொள்வது,. சிவகங்கை மாவட்டத்தில் விளைச்சல் உள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்ய கூடுதலான கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதலை தாமதிக்காமல் செய்ய மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.