இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த ஜூன் மாதம் மீன்பிடி பருவம் தொடங்கிய பிறகு நடைபெறும் 10-வது கைது நடவடிக்கை இதுவாகும். இதுவரை மொத்தம் 84 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்காக இந்திய அரசு கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் மீண்டும், மீண்டும் அத்துமீறும் துணிச்சலை சிங்கள அரசுக்கு கொடுத்துள்ளது. தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.