அரசு பேருந்துகளை தனியார்மயமாக்க தமிழக அரசு முயற்சி : அண்ணாமலை
படிப்படியாக அனைத்து பேருந்துகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் தமிழக அரசு இருக்கிறது.என கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதார இழப்பிலிருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
அரசு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று மத்திய அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய திமுகவினரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக விழிப்புணர்வாளர்களும், ஓலமிட்ட ஓரிரு ஊடகங்களும், தற்போது ஓய்வு நிலையில் இருப்பதால், இதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை
முதல் கட்டமாக ஆயிரம் பேருந்துகளை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்து இருக்கும் தமிழக அரசு, பின்னர் படிப்படியாக அனைத்து பேருந்துகளையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் இருக்கிறது.
மக்கள் சேவையை முதல் நோக்கமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது இத்துறையை முற்றிலும் அழிப்பதற்கு சமம் என்று திமுக தவிர அனைத்துச் தொழிற்சங்கங்களும் அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஆனால் இந்த நிலை ஏறப்படக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் தவறான முடிவுகளும், போக்குவரத்து துறைகளில் நடைபெறும் நிதி முறைகேடுகளும், தரமற்ற உதிரி பாகங்களை, அதிக விலையில் வாங்கி குவிப்பதாலும், சரியான மார்க்கத்தில் பேருந்துகளை செலுத்தாததாலும், பணியாளர்களுக்கு பணி ஒதுக்கீட்டில் நடைபெறும் குளறுபடிகளாலும், நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் தவறான தொடர் நடவடிக்கைகளாலும், தமிழக ஆட்சியாளர்களின் கையாலாகாத தனத்தாலும், தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுக்கு நேரடியாக தொண்டுகளைச் செய்ய வேண்டிய அரசு, இலாப நோக்கம் கருதாமல், இயங்க வேண்டிய, பொது நிறுவனங்களை எல்லாம், தனியாருக்குத் தாரை வார்த்து விட்டால், பிறகு அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செலுத்தப் போவது யார்?
உதாரணமாக மகளிருக்கும், காவலர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்த தமிழக அரசு, தனியாருக்கு தாரைவார்த்த பிறகு இவர்களுக்கான இலவசப் பயண திட்டத்தை என்ன செய்யப்போகிறது? ஒருவேளை இந்த இலவசங்கள் தனியார் பேருந்திலும் தொடருமானால்! அதற்கான இழப்பீட்டை, தமிழக அரசு தனியாருக்குத் தருமா? அப்படித் தந்தால் அது தகுமா? தமிழக அரசு தாங்குமா? என்ற கேள்விக்கு விடை என்ன?
தொலைநோக்குப்பார்வை இல்லாமல், தடாலடி முடிவுகளை எடுத்துவிட்டுத் தடுமாறும் வழக்கத்தை, இன்னும் தமிழக அரசு கைவிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் அத்தியாவசிய நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்ப்பதை தமிழக பாரதிய ஜனதாகட்சியின் சார்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.