"பழமையான மொழி, கலாச்சாரத்தை கொண்டது தமிழகம்" - கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகம் வந்த பீகார் மாநில மாணவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம் வந்த பீகார் மாநில மாணவர்களுடன் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற திட்டத்தின் கீழ் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:-
பாரதம் என்பது 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்படவில்லை. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது.
பழமையான மொழி தமிழ், சமஸ்கிருதம் எனக் கூறுவர்; ஆனால் அதில் தற்போது வரை முடிவு கிடைக்கவில்லை. தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கும், சமஸ்கிருதத்தில் இருந்தும் தமிழுக்கும் சொற்கள் வந்துள்ளன. ராஜாக்கள் ஆண்ட காலம் முதல் யார் வேண்டுமென்றாலும் எங்கி வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சூழல் இருந்தது.
மிகவும் பழமைவாய்ந்த மொழி தமிழ். பழமையான மொழி, கலாச்சாரத்தை கொண்டது தமிழகம். பன்மொழி இருப்பது இந்தியாவிற்கு அழகு. பக்தி இயக்கம் இந்த திராவிட மண்ணில் தான் தொடங்கியது. கலாச்சாரம், பண்பாட்டால் மிகவும் பழமையான நாடு இந்தியா.
இவ்வாறு அவர் கூறினார்.