அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது என தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

சென்னை,

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

18 வயது பூர்த்தி அடைந்த அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்களிப்பதன் அவசியம் போன்ற பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

13-வது தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

கவர்னர் பங்கேற்பு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைவரையும் வரவேற்றார். தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆகியோர் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை படித்தார். விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

விழாவில் கவர்னர் பேசியதாவது:-

100 சதவீத வாக்குப்பதிவு

100 சதவீத வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் பிரசாரம் மிக மிக முக்கியமானது. 18 வயது பூர்த்தி அடைந்த முதல்முறை வாக்காளர்கள் 1½ கோடி பேர் உள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டும்.

முன்னோடியாக திகழ வேண்டும்

தற்போது வாக்குப்பதிவு சதவீதம் சராசரியாக 70 என உள்ளது. இதனை 90 சதவீதம் வரை கொண்டு வர வேண்டும். இதற்கான விழிப்புணர்வை அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது. வாக்குப்பதிவிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு திகழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் தனது உரையை முடிக்கும்போது 'வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்' என்றார்.

கலெக்டர்களுக்கு பரிசு

இதன்பின்பு புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்குப்பதிவின் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்த சேலம் கலெக்டர் கார்மேகராஜ், 2-ம் இடம் பிடித்த அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி, 3-ம் இடம் பிடித்த தர்மபுரி கலெக்டர் சாந்தி ஆகியோருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இதேபோன்று தேர்தல் தொடர்பான பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி கலெக்டர் ஆகாஷ், கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்வரன்குமார் ஆகியோருக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் பரிசு வழங்கி பாராட்டினார்.

வாக்காளர் விழிப்புணர்வு கையேடு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த வீடியோ ஆகியவற்றையும் அவர் வெளியிட்டார். முடிவில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி நன்றி கூறினார்.


Next Story