தமிழகம் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது
தமிழகம் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.
தமிழகம் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளதாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.
சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் புதிய தொழில் தொடங்குவது மற்றும் மேம்படுத்துவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா முகாமை தொடங்கி வைத்து, தொழில் நிறுவனத்தினர் புதிய தொழில் தொடங்கிட கடன் உதவி கோரி வழங்கிய விண்ணப்பங்களை பெற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த நிதி ஆண்டில் ரூ.2,050 கோடி வருவாய் கிடைக்க பெற்றது. நடப்பாண்டில் ரூ.3 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. தொழில் முதலீட்டாளர்களுக்கு கடன் உதவி வழங்குவதில் இந்திய அளவில் சிறந்த நிறுவனமாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் விளங்கி வருகிறது. இந்நிறுவனம் இரண்டு இலக்குகளை நோக்கி தற்போது செயலாற்றி வருகிறது.
முதலாவது இந்திய பொருளாதாரத்தில் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னிலை அடைய புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கிட ஊக்குவிப்பது ஆகும். இரண்டாவது தமிழக முதல்-அமைச்சரின் முயற்சியில் தமிழகம் தொழில்துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிட 2030-ம் ஆண்டிற்குள் 1 ட்ரில்லியன் அளவுக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்தில் உருவாக்கும் வகையில் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது ஆகும்.
வேலை வாய்ப்புகள்
கடன் உதவிகள் வழங்குவது மட்டுமல்லாமல் தொழில் நிறுவனங்கள் நீடித்த நிலையான தொழில் வளர்ச்சியை அடைந்து நிலையாக தொழில்களை தொடர்ந்து செய்திட உறுதுணையாக இருக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அனைத்து உதவிகளையும் இணைந்து வழங்கி வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் கீழ் பல ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெல் நிறுவனத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பெல் நிறுவனம் புதிய தொழில் உற்பத்தி வாய்ப்புகளை பெறும் பொழுது தொழில் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடையும்.
சிறந்த மாநிலமாக
இந்தியாவில் 2 மாநிலங்களில் ராணுவ தளவாட உபகரணங்கள் தயாரிக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதில் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகம் தேர்வாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் இந்த உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்கின்ற மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகம் கனரக வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் இத்தொழிலில் உற்பத்தியை செய்து வருகின்றன. தமிழகம் மிகப் பெரிய அளவில் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக உள்ளது. பல்வேறு வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த வாய்ப்புகளை தொழில் தொடங்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் சிறந்த தொழில் நகரமாக மாற்றிட தொழில் முனைவோர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்வந்து தொழில் தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த முகாமில் மண்டல மேலாளர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், பெல் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வேலூர் கிளை மேலாளர் கவுரி மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.