பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது: கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதம்
பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பெருமிதத்துடன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. இந்திய நாடு மற்ற நாடுகளை போல் அல்ல. மற்ற நாடுகள் எல்லாம் ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டவை. இந்தியா அப்படி இல்லை. பாரத நாடு என்பது சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது.
ஆன்மிக தலைநகரம்
சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல, பாரத நாட்டில் உள்ள அனைவருக்கும் உள்ளடக்கியதாகும். நான், எனது என்று இல்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம் ஆகும். குறுகிய காலங்களாக சனாதனம் அழிவுகளை சந்தித்து வருகிறது. 1947-ல் தான் பாரத நாடு உருவானது என்று பலர் எண்ணுகின்றனர். 1947-ல் விடுதலை தான் பெற்றோம். தமிழகத்தில் பல பகுதிகளை நான் சுற்றி பார்த்து உள்ளேன். பாரத நாட்டின் ஆன்மிக தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதால் பெருமிதம் கொள்கிறேன்.
அசைவ உணவை விருப்பப்பட்டு சாப்பிடுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சாப்பிடலாம். அதற்கு கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. கிரிவலப் பாதையில் அசைவ உணவுகளை தவிர்ப்பதற்கு உண்டான தன்னால் முடிந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அன்னதானம்
அதைத்தொடர்ந்து கவர்னருக்கு சாதுக்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் சாதுக்களுக்கு கவர்னர் அன்னதானம் வழங்கினார்.