விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்


விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் கடலூர் சாலையில் பாலக்கரையில் இருந்து தாலுகா அலுவலகம் வரை பாலக்கரை பஸ் நிறுத்தம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், பள்ளி வாசல்கள், வங்கிகள், கோட்டாட்சியர் அலுவலகம், வணிக வளாகங்கள், தினசரி காய்கறி மார்க்கெட், அரசு மேல்நிலைப்பள்ளி, பெட்ரோல் பங்குகள் ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகள் முன்பு மதுபிரியர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வதால், விருத்தாசலம்-கடலூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சிலர் மதுகுடித்து விட்டு போதை தலைக்கேறியதும், அங்கு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இந்த 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஸ்டேட் வங்கி பஸ் நிறுத்தம் அருகே அமைந்திருந்த 2 கடைகளில் ஒரு டாஸ்மாக் கடை அதே பகுதியில் மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த விருத்தாசலம் நகரமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சியின் நகர செயலாளருமான பி.ஜி. சேகர் தலைமையில் மக்கள் அதிகாரம் முருகானந்தம், தமிழ்தேச மக்கள் முன்னணி ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிர்காமன், ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன், ராஜசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, த.வா.க. நகர தலைவர் கந்தசாமி, மாவட்ட ஊடகப்பிரிவு ராம்பிரகாஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இளஞ்சூரியன் உள்பட பலர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமாரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story