தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடைபயணம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நடைபயணம் ஆரணிக்கு வந்தது.
ஆரணி
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளித்து அரசு ஊழியர்களாக மாற்றப்படுவர், ஊதிய உயர்வும் வழங்கப்படும், ஓய்வுபெறும்போது ஒட்டு மொத்த தொகையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கவும் இந்த மாதம் (ஜூன்) 4-ந்தேதியில் இருந்து வருகிற 10-ந்தேதி வரை ராமேஸ்வரம், மயிலாடுதுறை, கும்மிடிப்பூண்டி, கோவை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் இருந்து 2,100 கிலோ மீட்டர் தூரம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட நடைபயணம் நேற்று ஆரணிக்கு வந்தது. அவர்களின் நடைபயணத்துக்கு ஆரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நகர எல்லையில் உள்ள காமராஜர் சிலை வரை ஆரணி ஒன்றிய தலைவர் பரசுராமன் தலைமையில் நடைபயணம் மேற்கொண்டனர்.
நடைபயணத்தில் செயலாளர் சித்ரா, அரசு ஊழியர் சங்க ஆரணி வட்ட கிளை தலைவர்கள் பாஸ்கரன், விஜயகுமார், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.