முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரவி தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதற்காக வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு அவர்கள் சென்றனர். பிரதான அணை, பேபி அணை, மண் அணை, அணையின் சுரங்கப்பகுதி, மதகுகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். அதுபோல் வல்லக்கடவு பாதை, தேக்கடி தலைமதகு ஆகிய இடங்களையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, தலைமை பொறியாளர் ரவி பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வில், அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர்கள் குமார், மயில்வாகனன், முருகேசன், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மாயகிருஷ்ணன், முரளிதரன், முகமது உவைஸ், நவீன்குமார், அபிநயா ஆகியோர் கலந்துகொண்டனர்.