தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பதிவாகும்: வானிலை மையம் தகவல்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் வரும் 29-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யுமென வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகிற 29-ந் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. நேற்று மதியம் 12.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டம் தண்டரம்பேட்டையில் அதிகபட்சமாக 5 சென்டி மீட்டர் மழையும், செங்கத்தில் 3 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. வாராந்திர வானிலை அறிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:-
தமிழகம் புதுவையில், கடந்த 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட வெகு குறைவாக பதிவாகி உள்ளது. இந்த காலகட்டத்தில், இயல்பு அளவு 34 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் பதிவான மழை அளவு 3 மில்லி மீட்டர். இது இயல்பை விட 91 சதவீதம் வெகு குறைவு.
16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகி உள்ளது. அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் 23-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பதிவான வடகிழக்கு பருவமழையின் அளவு 330 மில்லி மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 317 மில்லி மீட்டர். இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம். கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருந்த நிலையில், இது கடந்த வாரம் 4 சதவீதமாக குறைந்துள்ளது.
அடுத்து வரும் 2 வாரங்களில் நவம்பர் 25-ந் தேதி (நேற்று) முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையிலான காலகட்டத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.