மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

திருவண்ணாமலை

மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கட்டிடங்கள் திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் பொது சுகாதாரத்துறை அரசு புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் கலைஞரின் வரும் முன்காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சி திருவண்ணாமலை ஒன்றியம் அடிஅண்ணாமலையில் நடைபெற்றது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வகுமார் வரவேற்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-

மக்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நடைபெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கு நேரில் தேடிச்சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உலகத்திலேயே இல்லாத வகையில் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் செயல்படுத்தி வருகின்றார். மேலும் நம்மை காக்கும் 48 என்ற திட்டமும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. வடமாவட்டத்திலேயே பெரிய மாவட்டம் திருவண்ணாமலை. இது 8 தொகுதிகளை கொண்டு உள்ளது. எனவே, தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகம் முதலிடம்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்கள் மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த தீபத் திருவிழாவில் 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இவ்விழா நடந்து முடிந்ததால் முதல்-அமைச்சர் மகிழ்ச்சி அடைந்து உள்ளார். அமைச்சர் எ.வ.வேலு இவ்விழா குறித்து பல்வேறு கூட்டங்களை நடத்தியதால் தான் விழா இவ்வாறு சிறப்பாக நடந்து முடிந்து உள்ளது.

கடந்த 1½ ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக நாளொன்றுக்கு அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 70 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தினமும் 10 ஆயிரம் நபர்களுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், நகர்புற சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் என 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் 71 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு சார்பில் 36-ம், தனியாரில் 34-ம், இ.எஸ்.ஐ.யில் ஒன்றும் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மருத்துவம் பயில்பவர்களின் எண்ணிகையிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கின்றது.

விரைவில் ஒரு கோடியாவது பயனாளி

அந்த வரிசையில் மருத்துவ கட்டமைப்பிலும் தமிழகம் தற்போது முதலிடம் வகிக்கின்றது. தமிழக சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு பல்வேறு மத்திய அரசின் விருதுகளை பெற்று உள்ளது. அனைவருக்குமான மருத்துவ சேவை திட்டத்தின் கீழ் தமிழகம் முதல் மாநிலம் என்ற விருதினை பெற்று உள்ளது. கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனை செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 உள்ளிட்ட திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 25 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏ.கே. படவேடு ஆரம்ப சுகாதார நிலையமும் அடங்கும். திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.4 கோடி மதிப்பில் இருதய சிறப்பு சிகிச்சை மையமும், ரூ.12 கோடி மதிப்பீட்டில் தாய்-சேய் நல மையமும் திறக்கப்பட உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 99 லட்சத்து 31 ஆயிரத்து 961 நபர்களுக்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்து மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 லட்சத்து 63 ஆயிரத்து 32 பேருக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒரு கோடியாவது பயனாளிக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் வழங்கும் விழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து திட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

2,120 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

விழாவில் ரூ.1½ கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடிஅண்ணாமலை, தச்சூர் ஆகிய பகுதிகளில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம், நார்த்தாம்பூண்டியில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், செங்கம் காமராஜர் நகர், தோக்கவாடி ஆகிய பகுதிகளில் துணை சுகாதார நிலைய கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர்கள் இருவரும் திறந்து வைத்தனர். மேலும் 20 துறைகள் சார்பில் 2,120 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

விழாவில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனுவாசன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்ஷன் துரை வெங்கட், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன், திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் பரமேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மரியதேவ்ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வாி நன்றி கூறினார்.


Next Story