தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கியதில் தமிழகம் முதலிடம்


தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கியதில் தமிழகம் முதலிடம்
x

தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கியதில் தமிழகம் முதலிடம் பிடித்தது. இதற்காக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பாராட்டு சான்றிதழ், கேடயம் பெற்றார்.

சென்னை,

நாட்டில் அனைத்து மக்களுக்கும் தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் அமலில் இருக்கிறது. இந்த உன்னத திட்டத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 12-ந் தேதி அன்று அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது ஆகும்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள் மூலம் கடந்த அக்டோபர் 12-ந் தேதி முதல் டிசம்பர் 8-ந் தேதி வரையில் 22 லட்சத்து 58 ஆயிரத்து 739 பேருக்கு தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை புரிந்தது.

மத்திய மந்திரியிடம்பாராட்டு சான்றிதழ்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 'நாம் விரும்பும் ஆரோக்கியமான எதிர்கால உலகத்தை அனைவருக்கும் உருவாக்குவோம்' என்ற கருப்பொருளுடன் அனைவருக்கும் நலவாழ்வு திட்ட தின விழா முன்கூட்டியே கொண்டாடப்பட்டது.

விழாவில் மத்திய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.

அந்த வகையில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டுக்கு பாராட்டு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பெற்றுக்கொண்டார்.


Next Story