சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் சந்திப்பு
சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் சந்தித்து பேசினார். தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு அந்நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும் மற்றும் தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ளும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிங்கப்பூர் வாழ் தமிழர் தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து பேசினார். அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழம், அதிராம்பட்டினம் கல்லூரி, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி உள்ளார்.
தமிழ்ச்சேவைக்கு விருதுகள்
தமிழ் பேராசிரியர் சுப.திண்ணப்பன் கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் தமிழ் மற்றும் மொழியியல் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். அங்கு தமிழ்மொழி பாடத்திட்டக்குழு பாடநூல் உருவாக்கம் ஆகியவற்றிலும் கல்வி அமைச்சகத்தின் குழுக்களிலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் ஆற்றிய தமிழ்ச் சேவைக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களின் சார்பில் 20-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி மறைந்த எஸ்.ஆர்.நாதனுக்கும் தமிழ் பயிற்றுவித்து உள்ளார். முதல் அமைச்சரை சந்தித்த 88 வயதான சுப.திண்ணப்பனுக்கும், அவருடைய தமிழ் சமுதாயத்திற்கும் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவருக்கு, முதல்-அமைச்சர் சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார்.
தமிழக அரசுக்கு பாராட்டு
பின்னர் பேராசிரியர் சுப.திண்ணப்பன், நிருபர்களிடம் கூறியதாவது, 'நான் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரால்தான் வந்தது. திருவாரூரில் படித்துக்கொண்டு இருந்த போது, முதல்முதலில் கருணாநிதியின் பேச்சை கேட்டேன். அப்போதுதான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது. தமிழ் ஆசிரியராக வேண்டும், தமிழ் பேராசிரியராக வேண்டும் என்ற வேட்கை வந்தது. முதல்-அமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயண சலுகை, பெண்கள் கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதுபோல மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியவை. கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் தமிழ் வளர்ச்சி ஆகியவற்றை தனது முழுமூச்சாக கொண்டு முதல் அமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
இப்போது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிங்கப்பூர் வந்துள்ளார். சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கும் தமிழுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றியும், சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களை பாராட்டியதும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.
அப்போது தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சமூகவலைதளத்திலும் முதல்-அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.