அனைத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
அனைத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாசார உறவுகளுக்கான மன்றம் சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்ககைள் 1970-ம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இவ்வாறு அமைந்துள்ள வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கான இருக்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை 2014-ம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்து விட்டன. தற்போது 51 இருக்கைகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் இருக்கின்றன.
தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வமும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.