அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும்
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட டைரக்டர் பேரரசு கூறினார்.
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த திரைப்பட டைரக்டர் பேரரசு கூறினார்.
சாமி தரிசனம்
திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய டைரக்டர் பேரரசு சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அப்போது அவர் கோவிலில் சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலைஅம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. டைரக்டர் பேரரசுவை கோவிலுக்குள் பார்த்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்டாய பாடம்
எனக்கு தோன்றும் பொழுதெல்லாம் திருவண்ணாமலைக்கு வந்து இந்த புண்ணிய ஸ்தலத்தில் தரிசனம் செய்வேன். சுக, துக்கங்களில் சிவன் தான் எனக்கு பக்கபலம். புதிய திரைப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
வருகிற ஜனவரிக்கு மேல் படம் எடுக்க வாய்ப்பு உள்ளது. தமிழ் வளர்ச்சிக்கு எந்த அரசு தமிழ்நாட்டில் வந்தாலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது உள்ள பிள்ளைகளுக்கு தமிழில் பேச தெரிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை.
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் தமிழை காப்பாற்ற முடியும். 60 சதவீத பேச்சு மொழியாக தான் தமிழ் உள்ளது. அதுவும் இல்லாமல் போய்விடக் கூடாது. மாணவர்கள் மீது பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
இருமொழி கொள்கை
விருப்ப பாடமாக இந்தியை எடுக்கும் மாணவர்கள் இந்தியை எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டில் தமிழில் பேசத்தான் கற்றுக் கொள்கிறார்களே தவிர எழுத தெரியவில்லை. இது மிகப்பெரிய ஆபத்து.
தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை சரிதான். விருப்பப்பாடம் இந்தியில் இருந்தால் கூட தமிழ் மொழியில் முதலில் எழுத, படிக்க தெரிய வாய்ப்பு கொடுத்த பிறகுதான் அடுத்த மொழிக்கு செல்ல வேண்டும். தமிழை அழிக்காமல் தமிழை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.