தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்கிறார்கள்... சத்தியமாக இல்லை... - பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்கிறார்கள்... சத்தியமாக இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் ஆர்.என். ரவி உரை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கவர்னர் பேசியதில் அவர் ஏதேனும் சொந்த கருத்தை திணித்தாரா? இல்லை. ஒரே ஒரு இடத்தில் மத்திய அரசு என்ற வார்த்தையை சேர்ந்துள்ளார்.
இலங்கை படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை கொண்டுவர மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். உண்மையை கூறவேண்டுமானால் அதில் மத்திய அரசு தான் முழுமையாக வேலை செய்தது. மாநில அரசுக்கு அதில் உரிமை இல்லை. வெளியுறவுத்துறை மத்திய அரசை சார்ந்தது. அதை தவிர கவர்னர் சொந்த கருத்தை எங்கேயும் திணிக்கவில்லை. அந்த முழு உரையில் கவர்னர் தமிழ்நாடு அரசை பாராட்டி பேசியுள்ளார்.
சென்றமுறை கவர்னர் உரை நடந்த பின்னர் அதை எதிர்த்து நான் அறிக்கை கொடுத்திருந்தேன். கவர்னர் உரையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்... கவர்னர் திமுக கொடுத்ததை அப்படியே படிக்கிறார்... என்ன நமது கவர்னர். இதை படிக்கத்தான் கவர்னர் இருக்கிறாரா? என்று நாம் கூறியிருந்தோம்.
இந்த முறை கவர்னர் உரையில் எனக்கே சில இடத்தில் ஒப்புதல் இல்லை. எனென்றால் திமுகவை பாராட்டி பேசியிருக்கிறார்.
திமுகவினர் கொடுத்ததை அப்படியே படித்துள்ளார். நாங்கள் கொடுத்ததை கவர்னர் அப்படியே படிக்கவில்லை என்பது திமுகவினர் பிரச்சினை... திமுக கொடுத்ததை கவர்னர் அப்படியே படித்துள்ளார் என்பது பாஜக பிரச்சினை. அதை எப்படி கவர்னர் படிக்கலாம்... அதில் எவ்வளவு பொய்... தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்கிறார்கள்... சத்தியமாக இல்லை...
கோயம்புத்தூரில் இப்போது தான் ஐஎஸ்ஐஎஸ் தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது. இப்போது தான் ஒருவாரத்திற்கு முன்பு சீருடையிலில் இருந்த பெண் போலீஸ் மீது சில்மிஷம் செய்துள்ளனர்.
கவர்னர் பல இடத்தில் திமுகவை பாராட்டி, ஆட்சியை பாராட்டி பேசியுள்ளார். அதையே நான் குற்றம் சுமத்துகிறேன். கவர்னர் எதற்காக திமுக கொடுத்ததை படிக்க வேண்டும்? இதை சென்ற முறையும் கூறினேன். நீங்கள் தயவு செய்து அண்ணாமலை இந்த முறை பிரச்சினை ஆகிவிட்டது அதனால் மாற்றி பேசுகிறார் என்று நீங்கள் கேட்கக்கூடாது. சென்றமுறை கவர்னர் உரை முடிந்த உடன் நாங்கள் அறிக்கை கொடுத்துள்ளோம்.
ஆனால் ஒரு மரபு... திமுக அரசு அந்த அரசு கொடுப்பதை கவர்னர் படிக்க வேண்டும் என்பது மரபு. இதில் பிரச்சினை என்னவென்றால் உதாரணத்திற்கு, அந்த உரையில் திமுக அரசு கொடுத்ததில் என்ன சொல்கிறார்கள் என்றால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வந்த முதலீடு பணத்தில் தமிழ்நாடு தான் அதிகமான பணத்தை வாங்கியுள்ளது இது இந்த அரசின் சாதனை என உள்ளது.
கவர்னர் என்ன கூறுகிறார் என்றால் அந்த வரியை விட்டுவிட்டார். கவர்னர் அதை படித்தார் என்றால் பொய் சாட்சி கொடுப்பதற்கு சமம். 2021-22ல் கர்நாடகா அரசுக்கு 18 பில்லியன் டாலர் பணம் உள்ளே வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வந்தது 5 பில்லியன் டாலரை விட குறைவு. அப்படி இருக்கும்போது இந்தியாவிலேயே அன்னிய முதலீடு அதிகம் வந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்று கவர்னர் எப்படி படிக்க முடியும். அது பொய். இலங்கையில் உள்ள மீனவர்களை கொண்டுவந்ததற்கு ஒரே காரணம் தமிழ்நாடு அரசு என்று உரையில் இருக்கிறது அது தவறு. அரசியலமைப்பு படி வெளியுறவுக்கொள்கை மத்திய அரசிடம் உள்ளது. அதை மாநில அரசு ஏற்றுக்கொண்டார்களானால் அரசியல் சாசனத்திற்கே எதிரானது. அதைபடித்தார் என்றால் கவர்னரும் குற்றம்சாட்டப்பட்டவராக மாறுவார். அதை கவர்னர் படிக்கவில்லை.. படித்தார் என்றால் கவர்னருக்கு பிரச்சினை ஆகும்.
அதனால் நான் திமுக அரசுக்கு வைக்கும் வேண்டுகோள், நீங்கள் கவர்னருக்கு கொடுப்பதை கவர்னர் படித்துதான் ஆக வேண்டும் மரபு, மாண்பு... இல்லை என்று நான் கூறவில்லை... ஆனால், தயவு செய்து உண்மையை ஆராய்ந்துவிட்டு கொடுங்கள். இந்த தகவல் சரியா? இந்த தரவுகள் சரியா? என்று உண்மையை ஆராய்ந்து கொடுங்கள். கவர்னர் அவரது சொந்த கருத்து ஒரு கருத்தை வைக்கவில்லை. எனக்கும் கவர்னர் உரையில் பிரச்சினை உள்ளது. அவர் சில திமுக கருத்தை அப்படியே படிக்கிறார். அப்படி செய்யக்கூடாது என்பது எனது கருத்து மட்டுமல்ல பாஜக கருத்து' என்றார்.