மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்
மியான்மரில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 300 இந்தியர்களையும், அதில் மாட்டி அவதிக்குள்ளாகும் 50 தமிழர்களையும் மத்திய அரசின் வெளியுறவுத் துறை முழு முயற்சி எடுத்து மீட்கவேண்டியது மனிதநேய அடிப்படையிலும், நாட்டு உணர்வின் அடிப்படையிலும் மிக முக்கியமாகும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் அவர்களது துயர நிலையை விளக்கியுள்ளார். உடனடியாக அவசர நடவடிக்கைகளை மத்திய அரசு காலதாமதமின்றி செய்யவேண்டியது அவசியம், அவசரமாகும்.
கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் மீன் பிடித் தொழில் ஊர்களான ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற பகுதி களைச் சேர்ந்த மீனவர்கள் 19-ந்தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது விஷயத்தில் மாநில அரசும், மத்திய அரசும் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவது மிகவும் அவசியம். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.